கசகசா பட்டர் சிக்கன்

கசகசா பட்டர் சிக்கன்

பொதுவாக கசகசாவை குழம்பின் அடர்த்தி அதிகரிக்கத் தான் பயன்படுத்துவோம். ஆனால் அந்த கசகசாவைக் கொண்டு அற்புதமான ஓர் சிக்கன் ட்ரை ரெசிபியை சமைக்கலாம்.

கசகசா பட்டர் சிக்கன் சமைத்துப் பாருங்கள். இங்கு அந்த கசகசா பட்டர் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ
கசகசா - 150 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
வெண்ணெய் - 150 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கசகசா மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வறுத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின்பு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி, அதோடு உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும்.

இறுதியில் அதில் பொடி செய்து வைத்துள்ள கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, குறைவான தீயில் மீண்டும் மூடி வைத்து சிக்கனை நன்கு வேக வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தூவி பிரட்டி பரிமாறினால், கசகசா பட்டர் சிக்கன் ரெடி!!!