ரொய்யலு புளுசு (இறால் குழம்பு)

ரொய்யலு புளுசு (இறால் குழம்பு)

தேவையானவை:

இறால் (ரொய்யலு) - 200 கிராம்
மஞ்சள்த்தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்துள் - 2 டீஸ்பூன்
துருவி அரைத்த தேங்காய் - ஒரு கப்
பச்சை மிள‌காய் - 5
பெரிய வெங்காயம் - 3
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மல்லித்தூள்(தனியா) - 1 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - அரை கப்
கிராம்பு - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டேபிள்ஸ்ப்பூன்
புதினா, கறிவேப்பிலை - சிறிது
பொடியாக நறுக்கிய தக்காளி - 3
கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க‌
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

இறாலை சுத்தம் செய்து மஞ்சள்த்தூள், சிறிதளவு உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் போட்டுப் பிசைந்து கொள்ளுங்கள். அடுப்பில் தவாவை வைத்து எண்ணெய் விட்டு இறாலைச் சேர்த்து பத்து நிமிடம் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மற்றொரு பேனில் சிறிது எண்ணெய் ஊற்றி கிராம்பு, சீரகத்தூள் போட்டு வெடித்ததும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது போட்டு அதில் மல்லித்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, கூடவே நறுக்கிய‌ தக்காளி சேர்த்து வதக்கி உப்புப் போட்டு வறுத்த‌ இறாலையும் இத்தோடு சேர்த்து வதக்குங்கள். மசாலாவோடு இறால் சேர்ந்து வதங்கும் போதே தேங்காய்ப்பாலை ஊற்றி, துருவி அரைத்த‌ தேங்காயை இத்துடன் சேர்த்து 5 முதல் 8 நிமிடம் குறைந்த தீயில் வைத்து மிளகுத்தூள் தூவி அணைத்துவிட்டால், அட்டகாசமான ரொய்யலு புளுசு ரெடி. தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.