பேச்சுலர் மீன் குழம்பு

பேச்சுலர் மீன் குழம்பு

பேச்சுலர்களும் எளிதாகும், விரைவாகும் சமைக்கக்கூடிய மீன் குழம்புதான் இந்த மீன் குழம்பு. ஆனால் இதுதான் ஒரிஜினல் கேரளா திருச்சூர் ஸ்டைல் மீன் குழம்பு.

தேவையானவை:

1/2 கிலோ மீன் - துண்டுகளாக்கியது
ஒரு பெரிய துண்டு இஞ்சி
6-7 சின்ன வெங்காயம்
3-4 பச்சைமிளாகாய் இரண்டாக கீறியது
2 டீஸ்பூன் மிளகாய் பவுடர் (காரம் குறைவாக தேவைப்படுவர்கள் குறைத்துக்கொள்ளலாம்)
1 டீஸ்பூன் மஞ்சள் பொடி
1/4 ஸ்பூன் வெந்தயப் பொடி
3 துண்டு குடம்புளி அல்லது அரை பச்சை மாங்காய் துண்டுகள் (குடம்புளியை சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைக்கவும். இரண்டும் இல்லாதவர்கள் சாதாரண புளியை சேரத்துக் கொள்ளலாம்)
1 ஈர்க்கு கருவேப்பிலை
தேங்காய்பால் - 1 கப் (அவசரத்திற்க்கு தேங்காய்பால் பவுடர் அல்லது டின் தேங்காய்பாலும் உபயோகிக்கலாம்)

செய்முறை:

மண்சட்டியில் அல்லது ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த மீனை இடவும். இத்துடன் உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய் பொடி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு மற்றும் வெங்காயம், இஞ்சியை தட்டிப்போடவும் அல்லது சிறிதாக அரிந்தும் போடலாம். இத்துடன் அளவான தண்ணீர் மீன் முங்கும் அளவுக்கு ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கரண்டி உபயோகிக்க கூடாது. மண்சட்டி அல்லது பாத்திரத்தை எடுத்து லேசாக சுற்றி அடிபிடிக்காமல் இளக்கிவிட வேண்டும்.

மீன் வெந்தவுடன் தேங்காய்பாலை ஊற்றி சிறிது நேரம் சூடானவுடன் மேலாக வெந்தயப்பொடியை தூவி 2 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

2-3 சின்ன வெங்காயத்தை வட்டமாக அரிந்து சிறிது தேங்காய் எண்ணையில் பொன்னிறமாக வரும் வரை தாளித்து மீன் குழம்பில் சேர்க்கவும்.

நல்ல மணமும், சுவையும் உள்ள மீன் குழம்பு ரெடி.

மீன் வட்டிச்சது

இது மற்றொரு மீன் சைடிஸ். மேலே சொன்ன அதே முறை. இத்துடன் சிறிய சைஸ் தக்காளியில் பாதியை சிறு துண்டுகளாக்கி சேர்த்துக் கொள்ளவும். கருவேப்பிலையும், தேங்காய்ப்பாலும், வெந்தயப்பொடியும் வேண்டாம். மீன் வெந்தவுடன் மேலாக பச்சை தேங்காய் எண்ணெயை சிறிதளவு ஊற்றி மூடி விடவும். இதற்க்கு முக்கியமாக சிறிய வகை மீன்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.