காரசாரமான இறால் மசாலா

காரசாரமான இறால் மசாலா

விடுமுறை நாட்களில் வீட்டில் அசைவ உணவை நன்கு வாய்க்கு சுவையாக சமைத்து சாப்பிடுவதில் உள்ள சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது. அதிலும் உங்களுக்கு இறால் மிகவும் விருப்பம் என்றால் அதனை நன்கு காரசாரமாக மசாலா செய்து சாப்பிடுங்கள்.

இங்கு மிகவும் சிம்பிளான மற்றும் காரசாரமான இறால் மசாலா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
இறால் - 250 கிராம்
பட்டை - 1 துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்

ஊற வைப்பதற்கு...

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து 5-7 நிமிடம் வறுத்து தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் உள்ள எண்ணெயில் பட்டை, சோம்பு சேர்த்து தாளித்து, வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் அனைத்து மசாலா பொடிகளையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

அடுத்து தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். பின் அதில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். இறுதியில் இறால் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், காரசாரமான இறால் மசாலா ரெடி!!!